2 கிலோ நகையுடன் வந்த தொழிலதிபர்

2 கிலோ நகையுடன் வந்த தொழிலதிபர்

1 mins read
50901b4b-4f52-45fe-9c9e-3b786b3f726d
ரெஜிமோன். - படம்: ஊடகம்

விழுப்புரம்: மக்களவைத் தேர்தலின் போது உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.68,000 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 53 வயதான ரெஜிமோன் என்ற தொழில் அதிபர் அந்தக் காரில் இருந்தார்.

விழுப்புரம் அருகே உள்ள கண்டமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கையின் போது ரெஜிமோன் வந்த காரும் தடுத்து நிறுத்தப்பட்டது.

அவர் உரிய விளக்கம் அளிக்கத் தவறியதால் உரிய ஆவணம் காண்பித்து தொகையைப் பெற்றுச் செல்லுமாறு அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில் தேர்தல் முடிவடைந்த பின், பறிமுதல் செய்யப்பட்ட தொகையைப் பெற வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார் ரெஜிமோன்.

அப்போது இரண்டேகால் கிலோ எடையுள்ள தங்க நகைகளை அவர் அணிந்திருந்தார்.

தங்கச்சங்கிலி, தங்க பிரேஸ்லெட், தங்கக்காப்பு என நடமாடும் தங்கக்கடை போல் காட்சியளித்த அவரை ஆட்சியல் அலுவலக ஊழியர்களும் பொதுமக்களும் வியப்புடன் பார்த்தனர். தமக்கு கர்நாடகாவில் பல்வேறு சொத்துகள் உள்ளதாகவும் தனியார் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் உள்ளதாகவும் ரெஜிமோன் கூறியுள்ளார்.

தங்க நகைகளை அணிவது தமக்கு மிகுந்த விருப்பம் உள்ளதாகவும் எப்போதுமே நகைகளை அணிந்திருப்பதாகவும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்