22 மாவட்டங்களுக்கு ரூ.150 கோடியில் குடிநீர் விநியோகம்

22 மாவட்டங்களுக்கு ரூ.150 கோடியில் குடிநீர் விநியோகம்

2 mins read
2cda7622-bcf6-4c23-81b7-49e3dc6bb5ea
கோடை காலத்தில் குடிநீர்த் தேவை அதிகரிப்பதையடுத்து தண்ணீரைச் சிக்கனமாகச் செலவு செய்யுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: “கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம். கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு. இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்துத் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாங்க உயர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

“தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர்ப் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்காக மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 150 கோடி ரூபாய் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“இதனை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்குப் பிரித்து அளித்து, குடிநீர் வழங்கல், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை (27.4.2024) தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “கோடை காலமானது இரண்டு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஒன்று அதிகப்படியான வெப்பம். இன்னொன்று குடிநீர் தேவை அதிகரிப்பு. வெப்ப அலை பிரச்சினை குறித்து இரண்டு நாட்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்ததாகவும் அதுகுறித்த விரிவான அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தென்மேற்குப் பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதைவிட குறைவாகவே இருக்கக் கூடும் என்று இந்திய வானிலை நிலையம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, தற்போது அணைகளில் உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு குடிநீர்த் தேவையை நிறைவுசெய்ய வேண்டிய கடினமான சூழ்நிலையில் நாம் உள்ளோம்.

இதனைக் கருத்தில் கொண்டு அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாகச் செயல்பட்டு குடிநீர் பிரச்சினை நிலவக்கூடிய அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இந்தப் முக்கியப் பணிகளில் எந்தவிதமான சுணக்கமும் ஏற்பட்டு விடாமல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் கண்காணித்து வருமாறு தலைமைச் செயலாளரை கேட்டுக் கொண்டார்.

மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் மேற்பார்வை அலுவலர்கள் தொடர்ந்து நேரில் சென்று குடிநீர் விநியோகப் பணிகளை ஆய்வு செய்து, பற்றாக்குறை உள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை பற்றி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும் என்று அவர் தம் உரையில் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்