ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் மீதான வழக்கு: மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல்

1 mins read
7eb197de-2cfc-4f61-88e1-78f8f4b282ba
கோவை குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை என்ஐஏ தீவிரப்படுத்தி உள்ளது. - படம்: ஊடகம்

கோவை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் கோவையில் குண்டு வெடிப்புச் சம்பவத்தை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த தகவல் தெரிய வந்துள்ளது.

அந்த அமைப்பின் ஆதரவாளரான முகம்மது அசாருதின் என்பவர் கைது செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் கோவையில் குண்டு வெடிப்பு சதித்திட்டத்தைச் செயல்படுத்த இருந்ததாக கைது செய்யப்பட்ட ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய ஆதரவாளரான முகம்மது அசாருதின் கைதானார். இதையடுத்து தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்தன.

இந்நிலையில் அசாருதின் கைதுக்கு பதிலடி கொடுக்க ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த அமைப்பின் மற்றொரு ஆதரவாளரான உமர் பருக் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துள்ளார்.

இதன் மூலம் நாட்டில் அமைதியைச் சீர்குலைத்து ஒருமைப்பாட்டிற்கும், மத நல்லிணக்கத்திற்கும் ஊறு விளைவிக்கும் நோக்கத்துடன் ஒரு குழுவினர் செயல்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டு தமிழகக் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கோவையில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு காரில் கொண்டு செல்லப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், 14 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் மூன்றாவது முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்