பழனி: 18ஆம் நூற்றாண்டின் சிவகங்கைச் சீமை செப்பேடு தமிழகத்தின் பழனி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதில் பழனி முருகனுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை தொடர்பான தகவல்கள் எழுதப்பட்டுள்ளன. செப்பேட்டை பழனி மலைக் கோவில் திருமஞ்சனப் பண்டாரம் சண்முகம் என்பவரின் முன்னோர்கள் பாதுகாத்து வைத்துள்ளனர்.
தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி செப்பேட்டை ஆய்வு செய்த பின்னர், “இந்தச் செப்பேடு சிவகங்கைச் சீமையின் அரசர் விஜய ரகுநாத பெரிய உடையாத் தேவர், பழனி முருகனுக்கு அளித்த பூமி தானம் எனும் நிலக்கொடையைப் பற்றிக் கூறுகிறது,” என்றார்.
பழனிமலை முருகனுக்கு நடத்தப்படும் பூசை, திருவிளக்கு ஏற்றுதல், திருமாலை, நைவேத்தியம் ஆகியவை தடைபடாமல் இருக்க நிலக்கொடை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆறு ஊர்களுக்கான வரிகளை நீக்கியும் அரசர் உத்தரவிட்டுள்ளார். கொடை அளிக்கப்பட்ட கிராமங்களின் எல்லைப் பகுதிகளையும் செப்பேடு விரிவாக விவரிக்கிறது.
“செப்பேட்டின் முகப்பில் சூரிய, சந்திரர்களுக்கிடையே வேல், மயில், வலது ஓரத்தில் அரசரின் உருவம் ஆகியவை கோட்டுருவமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. 44 செ.மீ உயரமும் 25 செ.மீ அகலமும் உள்ள இச்செப்பேடு, 875 கிராம் எடை உள்ளது. செப்பேட்டின் இருபுறமும் முன்பின் பக்கங்களில் 100 வரிகளில் செப்பேடு எழுதப்பட்டுள்ளது,” என ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.


