மக்களவைத் தேர்தல்: கோவை தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்கத் தடை கோரி மனு

மக்களவைத் தேர்தல்: கோவை தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்கத் தடை கோரி மனு

2 mins read
d5415d0a-9449-461d-859a-bcd6bc772156
சென்னை உயர் நீதிமன்றம். - படம்: ஊடகம்

கோவை: கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் முடிவை அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மக்களவைத் தொகுதிகளில் உரிய காரணங்கள் இன்றி ஏராளமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அரசியல் கட்சியினர் புகார் எழுப்பியுள்ளனர்.

கோவையில் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து அவர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் மருத்துவராகப் பணியாற்றும் சுதந்திரக் கண்ணன் என்பவர் இவ்வழக்கை தொடுத்துள்ளார். இவர் கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்.

மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தன் மனைவியுடன் ஆஸ்திரேலியாவில் இருந்து கோவைக்கு வந்திருந்தார் சுதந்திரக் கண்ணன். ஆனால் வாக்காளர் பட்டியலில் இருவரது பெயரும் இல்லை.

“கடந்த 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்களித்துள்ள நிலையில் எங்களது பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களது மகள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது.

“இதேபோல எங்களது பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களும் கொத்து, கொத்தாக நீக்கப்பட்டுள்ளன,” என்று சுதந்திரக் கண்ணன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 15ஆம் தேதியே தாம் மின்னஞ்சல் வழி புகார் அளித்த நிலையில், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

எனவே நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, அவர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்கவேண்டும் என கோரியுள்ளார் சுதந்திரக் கண்ணன்.

அவரது மனு மீதான விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்