பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு: இருவர் விடுவிப்பு

பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு: இருவர் விடுவிப்பு

1 mins read
a0b31ca2-68cd-4dcb-9418-24e0cbb609b0
பேராசிரியர் நிர்மலா தேவி (இடது); விடுவிக்கப்பட்ட முருகன், கருப்பசாமி. - படம்: இந்து ஊடகம்

விருதுநகர்: கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வழக்கின் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தவர் நிர்மலா தேவி. இவர், மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. நிர்மலாதேவி தவறான முறையில் பேசும் ஆடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவின.

இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி நிர்மலா தேவியைக் காவலர்கள் கைது செய்தனர். அவருடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே, கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்திய புகாரை அடுத்து நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி எஸ்.பி. ராஜேஸ்வரி தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதுதொடர்பாக சுமார் 1,160 பக்க குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றத்தில் காவலர்கள் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்