தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாகனங்களில் ஒட்டுவில்லை ஒட்டத் தடை: மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

1 mins read
02c86b0c-5fd9-47d3-9f78-6c6a8e3d5130
வாகன ஒட்டுவில்லைத் தடையை எதிர்த்து மருத்துவர் சங்கமும் வழக்கறிஞர் சங்கமும் அறிக்கை வெளியிட்டுள்ளன. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: வாகனங்களில் விருப்பப்படி ஒட்டுவில்லைகளை அங்கீகாரம் அற்ற வகையில் ஒட்டிக்கொண்டு செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை போக்குவரத்து காவல்துறை அண்மையில் ஓர் அறிக்கை வெளியிட்டது.

அதில், மே 2ஆம் தேதி முதல் வாகனங்களில் எந்தவொரு ஒட்டுவில்லைகளும் ஒட்டப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு மீறி ஒட்டப்பட்டிருந்தால் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாகனங்களில் ‘டாக்டர்’ வில்லைகளை ஒட்டுவதற்கு அனுமதி அளிக்க கோரி, சென்னை காவல் ஆணையருக்கு ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் மருத்துவர் பி.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

அவசர காலங்களில் மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் மருத்துவர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரிப்பதால் தேவையற்ற காலதாமதம் ஏற்படும். இதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சந்தேகப்படும் மருத்துவர்களை அடையாள அட்டையைக் காட்ட சொல்லலாம். அனைத்து மருத்துவர்களையும் மருத்துவர் ஒட்டுவில்லை ஒட்டக்கூடாது என்பது மருத்துவர்களை அவமரியாதை செய்வதாகவும், உயிர்காக்கும் உன்னதப் பணியைத் தடுப்பதாகவும், மக்கள் உயிருடன் விளையாடுவதாகவும் மருத்துவர்கள் கருதுகிறார்கள். அதனால், அந்த சுற்றறிக்கையை உடனடியாக திருத்தம் செய்து, டாக்டர் ஒட்டுவில்லைகளை ஒட்டுவதற்கு விலக்களித்து, புதிய சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதேபோன்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர். கிருஷ்ணகுமார், துணைத் தலைவர் எஸ்.அறிவழகன் ஆகியோர் வாகன ஒட்டு வில்லைத் தடைக்கு விலக்குக் கோரி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்