சென்னை: தமிழகம் உள்பட நாடு முழுவதும் விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்பட மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு வெடிக்கப்போவதாக அச்சுறுத்தி மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் உள்ள 30க்கு மேற்பட்ட விமான நிலையங்களுக்கு அதே பாணியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஓசூர் மாருதி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனை வெடிகுண்டு மிரட்டல் காாரணமாக நோயாளிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது யார் என்பது குறித்து காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் உள்ள அனைத்துலக விமான நிலையத்திற்கு திங்கள்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, கோவா மற்றும் நாக்பூர் விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் சந்தேகத்திற்குரிய எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.
ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.நாடு முழுதும் விடுக்கப்பட்ட இந்த மிரட்டல் குறித்து, மத்திய இணைய குற்றவியல் காவல்துறை வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது .
இதுகுறித்து கூறிய மத்தியஅரசு அதிகாரி ஒருவர், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இப்போது கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.