சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி எச்.ராஜா மீது பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துகளைக் கூறியதாக புகார் அளிக்கப்பட்டது.
அதையடுத்து அந்தப் புகாரின் பேரில் காவல்துறை எச்.ராஜா மீது பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசியது, பொது அமைதியை சீர்குலைக்கும்படி நடந்துகொண்டது உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு எச்.ராஜா, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிட்டதாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஈரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஈரோடு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு, சென்னை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன் மீதுள்ள இந்த வழக்கை நீக்கும்படி எச்.ராஜா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, இந்த பதிவை பதிவிட்டது யார் என எச்.ராஜா தரப்பிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு எச்.ராஜா தரப்பில் பதிவிடப்பட்டதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
அதையடுத்து இந்த வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த நீதிபதி, விசாரணையை முறைப்படி எதிர்கொள்ள அறிவுறுத்தி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.

