தேனி: இளையர் ஒருவர் வாக்கு எண்ணும் மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அத்துமீறிய இளையர் ராஜேஷ் கண்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பல்வேறு இடங்களில் மூன்று அடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க பொறியியல் கல்லூரியும் வாக்கு எண்ணும் மையமாக செயல்படுகிறது.
கடந்த 19ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தலில் முதற்கட்டமாக தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்காகப் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் இக்கல்லூரியில்தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
கல்லூரி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருபத்து நான்கு மணி நேரமும் இப்பகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் நடமாட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதியன்று வாக்கு எண்ணும் மையத்துக்குள் 27 வயதான ராஜேஷ் கண்ணன் என்ற இளையர் அத்துமீறி நுழைந்தார்.
இவர் இக்கல்லூரியின் முன்னாள் ஊழியர் என்றும் கல்லூரி செயலாளரின் முன்னாள் வாகன ஓட்டுநர் என்றும் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கல்லூரிக்குள் நுழைய முயன்றபோது ராஜேஷுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. இதையடுத்து கொடுவிலார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மதுக்கண்ணன் இந்த அத்துமீறல் குறித்து காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் ராஜேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ள தேனி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவரான டிடிவி தினகரன், தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும்வரை வாக்கு எண்ணிக்கை மையங்கள் பாதுகாப்பாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
ஏற்கெனவே நீலகிரி, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்புக் கருவிகள் திடீரென செயலிழந்துவிட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், தேனியில் நிகழ்ந்துள்ள சம்பவம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.


