தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை

1 mins read
45f381f6-178e-41a4-b4fa-bdb21cf51eff
தஞ்சை பெருவுடையார் கோயிலில் இந்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும்  பராமரிப்பு பணிகள். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவதூறு பரப்பும் வகையில் காணொளி வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயிலின் அடித்தளத்தை அசைக்கும் வகையில் தரைத்தளங்களை உடைத்து இந்து சமய அறநிலையத் துறையால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒரு காணொளி வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயில் மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

“இந்தத் திருக்கோயில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் இந்திய தொல்லியல் துறையினரால் மட்டுமே மேற்கொள்ளப்படும். இந்து சமய அறநிலையத் துறையால் தினசரி பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

“இந்நிலையில், சன்னதியின் பின்புறத்தில் உள்ள தரைத்தளம் மேடு பள்ளங்களுடன் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடப்பதற்கு சிரமமாக உள்ளதால் தரைத்தளத்தில் பராமரிப்புப் பணிகள் இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

“இந்து சமய அறநிலைத் துறையின் மீது அவதூறு பரப்பும் வகையில் காணொளி வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்