இரு கைகளை இழந்தும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை: ஓட்டுநர் உரிமம் பெற்று தமிழக இளையர் சாதனை

இரு கைகளை இழந்தும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை: ஓட்டுநர் உரிமம் பெற்று தமிழக இளையர் சாதனை

2 mins read
1d54af3c-e8c8-4ed1-a74d-aabcb879c417
இளையர் தான்சென். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 31 வயதான தான்சென் என்ற இளையர் இரண்டு கைகளை இழந்துவிட்ட போதிலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு கார் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளார்.

சென்னையில் வசிக்கும் அவருக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பத்து வயது இருக்கும்போது மின் விபத்தில் சிக்கிய தான்சென் தமது மூட்டுக்குக் கீழே இரு கைகளையும் இழந்து விட்டார். எனினும் அவர் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. விடாமுயற்சியுடன் பொறியியில் படிப்பை முடித்து, தற்போது பட்டமேற்படிப்பை மேற்கொண்டுள்ளார்.

இவருக்கு ஒன்றரை வயது மகள் உள்ளார். இந்நிலையில் தானும் பிறரைப்போல் கார் ஓட்ட வேண்டும் என்று விரும்பிய தான்சென்னுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ், தொழில் அதிபர் ஸ்ரீவாரி சங்கர் ஆகியோர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

இதன் மூலம் நடைமுறைச் சிக்கல்களைக் கடந்து கார் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளார் தான்சென். சென்னையில் உள்ள கே.கே.நகர் புணர்வாழ்வு மருத்துவமனையும் இவருக்கு உதவ முன்வந்தது.

தான்சென்னுக்கு ஏற்ப காரின் வடிவமைப்பை மாற்றி தானியங்கி கியர் முறையை கையாளும்படி அறிவுறுத்தப்பட்டது. அந்த அறிவுரையை பின்பற்றியதையடுத்து தமிழகத்தில் இரு கைகளையும் இழந்த நிலையில் ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் தான்சென்.

மேலும் இந்திய அளவில் மூன்றாவது நபராக இச்சாதனையை அவர் புரிந்துள்ளார். தனது கைமூட்டுகளின் மூலம் ‘ஸ்டியரிங்’கைப் பிடித்து லாவகமாக கார் ஓட்டுகிறார் தான்சென்.

மேலும் கால்களை சரியான முறையில் பயன்படுத்தினார். கார் கதவை திறப்பது, இருக்கை பட்டை போடுவது, அவசர நேரத்தில் உடனடியாக பிரேக் போடுவது உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் அவருக்கு கற்றுத்தரப்பட்டுள்ளன.

மூன்று மாத தீவிரக் கண்காணிப்பு, பயிற்சியின் பலனாக ஓட்டுநர் உரிமம் வாங்கும் கனவு நனவாகியுள்ளதாக நெகிழ்கிறார் தான்சென்.

குறிப்புச் சொற்கள்