தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜெயக்குமார் மரணம்: உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு

2 mins read
7b002d6a-eea1-4b7d-8afd-916d5ac73bd6
திருநெல்வேலி மாவட்டத்தின் கிழக்கு பகுதிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங். - படம்: ஊடகம்

திருநெல்வேலி: தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் உடல் சனிக்கிழமையன்று எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

ஜெயக்குமாரின் கை, கால்கள் பலகையில் கட்டப்பட்டும், உடல் கருகிய நிலையிலும் இருந்தது. எனவே, அவரை யாரேனும் கை-கால்களை கட்டி கொலை செய்து எரித்தார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.

ஞாயிற்றுக்கிழமை ஜெயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாகவும் பரிசோதனைக் காட்சிகள் அனைத்தும் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.

உடல் ஒப்படைப்பு

இந்நிலையில் ஜெயக்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமாரின் உடல் அவரது சொந்த ஊரில் உள்ள தேவாலயத்தில், இறுதி பிரார்த்தனைக்குப் பின் அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்பார் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

இதனிடையே ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

“உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு காவல்துறை, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். கட்சி ரீதியாகவும் விசாரணை நடத்த குழு அமைத்துள்ளோம். குற்றவாளிகள் எந்த பின்புலம் கொண்டவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

கடந்த மாதம் 30ஆம் தேதி தனக்கு நேரிலும் தொலைபேசி வழியாகவும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும் காங்கிரஸ் கட்சியினர் உட்பட சிலரது பெயர் விவரங்களை எழுதியும் நெல்லை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் சிலம்பரசனுக்குத் திரு ஜெயக்குமார் புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார்.

தேர்தலின்போது செலவழித்த பணத்தைத் திரும்பக் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், கட்டுமானப் பணியை மேற்கொண்டு, பின்னர் அதற்கான பணத்தைத் கேட்டதற்கும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், தன் வீட்டின் முன்பாக இரவு நேரங்களில் முன்பின் அறியாத சிலர் சுற்றித் திரிவதாகவும் அவர் கூறியிருந்தார். இம்மாதம் 2ஆம் தேதி ஜெயக்குமார் காணாமல் போனார்.

குறிப்புச் சொற்கள்