சென்னை: அவதூறு புகாரின் பேரில் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கஞ்சா விற்ற இளையரும் சிக்கியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், சவுக்கு சங்கர் காவல்துறையினர் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகப் புகார் எழுந்தது. குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து அவர் மோசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டபோது, தேனியில் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் அரை கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவானது.
கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கஞ்சா விற்ற இளைஞர் கைதானார். அவர் பெயர் மகேந்திரன் என்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெண் காவலர்கள் வலியுறுத்தி உள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.