தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி: பாஜக பிரமுகரின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் சிபிசிஐடி சோதனை

2 mins read
e3776d25-179d-41ef-8da2-40188f505260
நயினார் நாகேந்திரன். - படம்: ஊடகம்

சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னர் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக பிரமுகர் முருகானந்தம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சிபிசிஐடி காவல்துறையினர் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

சென்னையில் இருந்து நெல்லை செல்லும் ரயிலில் இந்தப் பெருந்தொகை சிக்கியது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் பாஜக வேட்பாளரும் எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்படுகிறது என கைதானவர்கள் விவரம் தெரிவித்தனர்.

இதனால் நயினார் நாகேந்திரன் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். மேலும், பிடிபட்ட பணத்துக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ரயிலில் பணத்துடன் சிக்கியவர்கள் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. அதேசமயம் இவ்வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னையில் வசித்து வரும் பாஜக பிரமுகரான கோவர்த்தன் என்பவரிடம் சிபிசிஐடியினர் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.

மேலும், நீலாங்கரை பகுதியில் வசித்து வரும் கோவர்த்தன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோவர்த்தன் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக கேரளா சென்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. எனவே, அவர் வீடு திரும்பியதுடன் விசாரிக்கப்பட உள்ளார்.

எனினும் வீட்டில் இருந்த அவரது மகன்கள் பாலாஜி, கிஷோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சுமார் நான்கு மணி நேரம் நீடித்த சோதனையின்போது பல்வேறு முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவை குறித்து விரைவில் விளக்கம் அளிக்க இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விசாரணை நடவடிக்கையால் தமிழக பாஜக வட்டாரங்களில் சலசலப்பு நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்