800 கிலோ தங்கத்துடன் சென்ற வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து; பத்திரமாக மீட்ட ஈரோடு காவல்துறையினர்

1 mins read
f5927e84-3791-4e94-9fae-cf0faaf0727d
விபத்தில் சிக்கிய வாகனம். - படம்: ஊடகம்

ஈரோடு: 800 கிலோ தங்கத்துடன் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனம் ஒன்று, நள்ளிரவில் விபத்தில் சிக்கி சாலையில் கவிழ்ந்தது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த காவல்துறையினர் அந்த வாகனத்தில் இருந்த இரண்டு பேரை மீட்டனர்.

இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்துக்குள்ளான வாகனத்தில் ரூ.666 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது.

தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த வாகனம் திங்கள்கிழமை அதிகாலையில் ஈரோட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.

வாகனத்தில் இருந்த ஓட்டுநர் சசிகுமார், தனியார் பாதுகாவலர் பால்ராஜ் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். 800 கிலோ தங்க நகைகள் இருப்பதை அறிந்ததும் காவல்துறையினர் அந்த வாகனத்தை பத்திரமாக மீட்டு காவல்நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.

பின்னர் வணிக வரித்துறை அதிகாரிகள் நேரில் வந்து நகைகளுக்கான ஆவணங்களைச் சரிபார்த்தனர். இதையடுத்து தனியார் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று மற்றொரு வாகனத்தில், துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்போடு சேலம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
விபத்து