வெளிப்படைத் தன்மையுடன் தேர்தலை நடத்த திருமாவளவன் வலியுறுத்து

2 mins read
55f5a371-2168-4d00-9e64-626a01e30333
திருமாவளவன். - படம்: ஊடகம்

சென்னை: நாட்டில் நடைபெறும் தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என வலியுறுத்தி மத்திய தேர்தல் ஆணையத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடிதம் அனுப்பி உள்ளார்.

வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில் ஏற்படும் தடைகளைக் களைய வேண்டும் என அவர் தமது கடிதத்தில் வவலியுறுத்தி உள்ளார்.

வாக்கு எண்ணிக்கையை சிலமணி நேரங்களில் முடிக்கும் தேர்தல்ஆணையம், வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில் இவ்வளவு தாமதம் செய்தது ஏன் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

“இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான முதல் 2 கட்ட தேர்தல்களின் இறுதி வாக்காளர் எண்ணிக்கை தரவுகளை கடந்த ஏப்ரல் 30ஆம் தேதிதான் வெளியிட்டது.

“அதன்படி மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்து 10 நாட்களுக்கு பிறகு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்து நான்கு நாட்களுக்கு பிறகு வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

“முந்தைய சந்தர்ப்பங்களில் வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் அது தொடர்பான விவரங்களை ஆணையம் வெளியிட்டது. ஆனால் இப்போது ஏன் இந்த மாற்றம்,” என திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் தாமதத்தை நியாயப்படுத்துவதற்கான எந்த விளக்கத்தையும் தேர்தல் ஆணையம் வழங்கவும் இல்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

விளக்கங்களை அளிப்பதற்கு தேர்தல் ஆணையம் தயங்குவது ஏன் என்றும் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மேலும் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் எண்ணிக்கைத் தரவுகள், ஒவ்வொரு மக்களவை தொகுதி, சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் போன்ற புள்ளிவிவரங்களை குறிப்பிடவில்லை.

“எனவே வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்படும் முரண்களை களைவதற்கு ஏதுவாக ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்களை வெளியிட வேண்டும்,” என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்