ராட்வைலர் உள்ளிட்ட 23 வகை நாய் இனங்களுக்குத் தமிழகத்தில் தடை

ராட்வைலர் உள்ளிட்ட 23 வகை நாய் இனங்களுக்குத் தமிழகத்தில் தடை

படம்: இணையம்

09 May 2024 - 7:59 pm

2 mins read

சென்னை: ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்கள், அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்புப் பிராணிகளாக விற்பனை செய்வதற்கும், இவைகளின் எல்லா வகை பயன்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்போது வளர்ப்புப் பிராணியாக இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண், பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளி இடங்களுக்குக் கூட்டி செல்லும்போது அவற்றுக்கு கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி), தற்காப்பு முகக்கவசம் அணிந்து அழைத்து செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வைலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் இரண்டு, தாக்கி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்த ஒரு சம்பவம் மக்களுக்கு மிகுந்த மனவருத்தத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதையடுத்து, கால்நடை பராமரிப்புத் துறையின் வல்லுநர்கள், துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையில் 23 வகையான நாய் இனங்கள் மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாய்கள் வளர்ப்பதற்கான கட்டாய உரிமம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருப்பதகாவும் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் அமைக்கப்படும் என்று வியாழக்கிழமை (மே 9) செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பினரும் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும். விலங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியாது. மதுரைக்கு அப்புறப்படுத்தப்பட்ட ராட்வீலர் நாய்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தை உரிய சட்டப்பிரிவுகள் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாய் கடிக்கு ஆளான சிறுமியின் உடல்நிலை குறித்து பல தவறான தகவல் பரப்பப்படுகிறது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய் கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை நாய் வளர்ப்பவர்கள் புரிந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார். .

குறிப்புச் சொற்கள்