நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான கே.பி.கே ஜெயக்குமார் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
திசையன்விளை அருகே கரைச்சுத்து புதூரைச் சேர்ந்த இவர், 60, ஒப்பந்தத் தொழில்களையும் செய்து வந்தார்.
இம்மாதம் 4ஆம் தேதி காலையில் தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இந்தச் சம்பவத்தை மாவட்ட காவல்துறை சூப்பிரிடன்டெண்ட் சிலம்பரசன் மேற்பார்வையில் 10 தனிப்படைகள் தீவிரமாக விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் 5வது நாளாக நேற்று (மே 10) தடயவியல் நிபுணர்கள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். தோட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று, அங்கு உள்ள பொருட்களை சேகரித்து ஆய்வு செய்தனர்.
ஜெயக்குமார் தனசிங் இறந்து கிடந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து 4 ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அந்த கிணற்றில் இருந்து கத்தி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அந்த கத்தியை தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். அந்த கிணற்றில் தூர்வாறும் ஊழியர்கள், தீயணைப்பு படையினர் தடயங்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய தடயங்கள் கிணற்றில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. சுமார் 17 மணிநேரமாக கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைக்கப்பட்டது.

