சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு தமிழகத்தில் ஒரே நாளில் தங்கத்தின் விலை இரு முறை உயர்ந்தது.
சித்திரை மாதத்தில் அட்சய திருதி நாளில் தங்கம் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அன்றைய தினம் தங்கம் வாங்கினால் மென்மேலும் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதனால் ஆண்டுதோறும் அட்சய திருதியை நாளில் நகைகடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் அட்சய திருதியை முன்னிட்டு சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்தது.
வெள்ளிக்கிழமை காலை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 ரூபாயாக அதிகரித்த நிலையில், நண்பகலுக்குப் பிறகு மேலும் ரூ.360 அதிகரித்தது.
ஒரே நாளில் தங்கத்தின் விலை அதிகரித்தது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எனினும், நகைகள் வாங்குவதற்காக ஏராளமானோர் நகைக் கடைகளில் குவிந்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள நகைக் கடைகளில் வழக்கத்தைவிட இரு மடங்கு வியாபாரம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
அட்சய திருதியை என்றால் அள்ள அள்ளக் குறையாமல் செல்வம் சேரும் என்று பலரும் நம்புகிறார்கள். இதனால் நகைக்கடைகளில் அன்றைய தினம் கூட்டம் அதிகரிப்பது வழக்கமாகிவிட்டது.