சென்னை: உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாகத் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
“கடந்த ஆண்டு 178 பேர் பல்வேறு காரணங்களால் மூளைச்சாவு அடைந்ததை அடுத்து, அவர்களிடம் இருந்து ஆயிரம் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.
“நாடு தழுவிய அளவில் உடல் உறுப்பு தானம், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை அதிக எண்ணிக்கையில் மேற்கொண்டதற்காக தமிழகத்துக்கு சிறப்புப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
“கடந்த 2022ஆம் ஆண்டு தமிழகத்தில் 156 பேரும் 2023 தொடங்கி தற்போது வரை 180 பேரும் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
“அவர்களிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட உறுப்புகள் மூலம் 1,595 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.