சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
அண்மைக்காலமாக தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் வேகமாக அதிகரித்து வருவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழகம் போதைப் பொருள்களின் தலைநகரமாக மாறிவிட்டது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். மேலும் மற்ற துறையைச் சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
கூட்டத்தில் மாநில உள் துறைச் செயலாளர், தமிழக காவல் துறை தலைவர், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை தலைமைச் செயலாளர் சுட்டிக்காட்டியதாகவும் இத்தகைய சூழலில் இந்த ஆலோசனைக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறியதாகவும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் கருத்துகள் பறிமாறிக் கொள்ளப்பட்டன.
மேலும், கடந்த காலத்தில் புகையிலைப் பொருள்களின் விற்பனையைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளையர்கள் மத்தியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்பட வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் வலியுறுத்தியதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.


