சென்னை: தமிழக அரசின் கொளத்தூர் தொகுதியில் ரூ.110 கோடி செலவில் சிறப்பு மருத்துவமனை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கான கட்டுமானப் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அம்மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு தயாராகும் என்றும் அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
சென்னை, கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய மூன்று அடுக்கு சிறப்பு மருத்துவமனை கட்டடம் ஒன்றை ரூ.55 கோடி செலவில் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 ஆம் ஆண்டு உத்தரவிட்டார் என்றும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மேலும் ரூ.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக மூன்று தளங்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுமானத்தின் மூலம் அந்த மருத்துவமனையில் 2.32 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் புது மருத்துவமனை உருவாகும். அது 556 படுக்கை வசதிகளைக் கொண்டிருக்கும்.
தரைத்தளத்திலேயே தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட உள்ளது. ரத்த வங்கி, மூன்று அறுவை சிகிச்சைக் கூடங்கள், முழு உடல் பரிசோதனை பிரிவு, சிறார் பிரிவு, கர்ப்பிணிகள் பிரிவு ஆகியவை இடம் பெற்றிருக்கும் என்று அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், புதிதாக கட்டப்படும் மூன்று தளங்களில் புற நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், நீரிழிவு பிரிவு, இதயவியல் பிரிவு எனப் பல்வேறு வசதிகள் இடம்பெறுகின்றன.


