சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு மதுரையில் நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில், அக்கட்சியின் முதன்மை நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் ஆணையம் முறைப்படி பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், தலைமைக் கழகச் செயலாளர் ராஜசேகரன் எனத் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அவை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, கட்சிப் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது.
முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்ப்புக்கான இலக்கை எட்டிப்பிடிக்க வேண்டும் என விஜய் கூறியுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
“மேலும், ஆங்காங்கே சிறு பொறுப்புகளுக்குத் தேர்வாகும் கட்சி பிரமுகர்களுக்கு கட்சியின் சட்டதிட்டங்களை எடுத்துக்கூற வேண்டும் என்றும் விஜய் கூறியுள்ளார்.
“அரசியல் அரங்கத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கட்சியின் அனைத்து மட்டத்திலும் உள்ள நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க விஜய் திட்டமிட்டுள்ளார்,” என்று தமிழக வெற்றிக் கழக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.