தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாகை எம்.பி. செல்வராசு மறைவு

2 mins read
943ff885-aea2-428d-84d0-eb2c1f3dfffb
நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எம்.செல்வராசு. - படம்: இணையம்

சென்னை: நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எம்.செல்வராசு திங்கட்கிழமை (மே 13) அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 67.

அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராமதாஸ், கே.பாலகிருஷ்ணன் உள்பட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

செல்வராசின் மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும், டெல்டா மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சிறுநீரக பாதிப்பு காரணமாக மாற்று சிறுநீரகம் பொருத்திக்கொள்ளும் சிகிச்சை பெற்ற அவர், உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கமலவதனம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

அவரது உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. செவ்வாய்க்கிழமை (மே 14) காலை 10 மணியளவில், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள சித்தமல்லி கிராமத்தில் அன்னாரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும்.

கடந்த 1975ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த செல்வராசு சுமார் அரைநூற்றாண்டுக் காலம் பொதுவுடைமை இயக்கத்தில் செயல்பட்டு வந்தவர்.

நான்கு முறை நாகை மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள அவர், டெல்டா மாவட்டங்களுக்கு ரயில்வே திட்டங்கள் வேண்டியும், அப்பகுதி வேளாண் பெருங்குடி மக்களின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கட்சி அமைப்புகள், செங்கொடியினை அரைக் கம்பத்திற்கு இறக்கி விட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்