சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கிப் புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பணத்தை வைத்திருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் தமிழக பா.ஜ.க, துணைத்தலைவரும், திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க, வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என்பது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம், தேர்தல் செலவுக்காக நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்றதாகவும் அவர்கள் கூறினர். இதனால் நயினார் நாகேந்திரன் மீது தாம்பரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி.,க்கு மாற்றப்பட்டது. இதுவரை 15க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல்துறைக்குப் புதிதாக ஒரு தடயம் கிடைத்துள்ளது. ரயிலில் பணத்துடன் கைதானவர்கள் நயினார் நாகேந்திரன் பரிந்துரையின் பேரில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ‘எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்’டில் ரயிலில் பயணம் செய்தது தெரியவந்துள்ளது. இது நயினார் நாகேந்திரனுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.