புதுக்கோட்டை: அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரின் காரில் கஞ்சா கைப்பற்றப்பட்டதற்கு உரிய ஆதாரங்கள் இருக்கின்றன. அவர் உட்பட யார் மீதும் பொய் வழக்குப் போட வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே செய்தியாளர்களை அமைச்சர் ரகுபதி சந்தித்தார். அப்போது சவுக்கு சங்கர் பற்றிய செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த அவர், தமிழக அரசுக்கு யார் மீதும் பொய் வழக்குப்போட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை ஒருநாள் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும். இந்த வெற்றி தமிழக அரசின் மூன்று ஆண்டுகால சாதனைக்குப் பரிசாக அமையும்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்ற வேண்டும். அப்போதுதான், அதிமுக சரியான எதிர்க்கட்சியாக இருக்கும். அதை விட்டுவிட்டு வேறுவகையான விமர்சனங்களில் ஈடுபடுவது, அவரது பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
அதிமுக செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமைக்கு மாறுமா என்பது மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின்னரே தெரியும். ஆனால், அந்தக் கட்சியில் பெரிய பிளவு உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளது. பிளவை ஏற்படுத்தும் பணியை பாஜக செய்ய வாய்ப்புள்ளது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

