சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குத் தொடர ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி அளிக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதைக் கண்டித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, அறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தரப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இருதரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரி, சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ்மனுஷ் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுக் கொடுத்தார்.
இந்த நிலையில், அண்ணா குறித்துப் பேசியதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குத் தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், ஆளுநர் மாளிகை அதை மறுத்துள்ளது.
இதன் தொடர்பில் செய்திக்குறிப்பு ஒன்றை அது வெளியிட்டுள்ளது.
அதில், “தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்துப் பொதுமக்கள் ஆளுநரிடம் கடந்த இரண்டு நாள்களாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“அத்தகைய வழக்கு தொடர்பான எந்தத் தகவலையும் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்த ஆளுநர் மாளிகை, அதன் தொடர்பில் ஆளுநர் அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.