சென்னை: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னையில் பதுங்கி உள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள ராமேசுவரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வழக்கில் கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என்றும் அதன் அடிப்படையில் சென்னையில் சில பயங்கரவாதிகள் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது என்றும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னையில் முகாமிட்டுள்ள புலனாய்வு அதிகாரிகள், சந்தேகத்துக்குரிய இடங்களில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நாட்டின் வேறு சில பகுதிகளிலும் சோதனை நடத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
முதற்கட்டமாக மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவில் பதுங்கி இருந்த, 30 வயதான அப்துல் மதீன் தாஹா உள்ளிட்ட இருவர் பிடிபட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அப்துல் மதீன் தாஹா மூளையாகச் செயல்பட்டதாகவும் அவர் அப்போதே தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“இவர் உள்ளிட்ட மேலும் சிலர் தமிழகத்தில் கோவை, மயிலாடுதுறை, சென்னையில் தங்கியிருந்து இளையர்களை மூளைச் சலவை செய்ததாகவும் பின்னர் அவர்களை ஐஎஸ் அமைப்பில் சேர வைத்ததாகவும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு ஆயுதப் பயிற்சி, வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்ட அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது,” என்று தமிழக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட மேலும் சிலர் சென்னையில் இருப்பதும் சிலர் தலைமறைவாகிவிட்டதும் தெரியவந்ததை அடுத்து, அவர்களைக் குறிவைத்தும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

