சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கெனவே முடிந்துவிட்டது. இந்தச் சூழலில் தோ்தல் நடத்தை விதிகளைக் காரணமாகக் கூறி, கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், பழைய மரக்காணம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் கூழ் வார்க்கும் திருவிழா நடக்க உள்ளது. இதையொட்டி மே 18ஆம் தேதி ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கும்படி வளத்தி காவல்நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.
ஆனால், தோ்தல் நடைமுறை சட்டத்தைக் காரணமாகச் சுட்டிக்காட்டி, அந்த மனுவை காவலர்கள் ஏப்ரல் 29ஆம் தேதி நிராகரித்துவிட்டனர்.
இதுதொடா்பாக பழைய மரக்காணம் கிராமத்தைச் சோ்ந்த கேசவன் என்பவர், சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, “தோ்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி, கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது,” எனக் கூறி, சட்டத்துக்குட்பட்டு கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவேண்டும் என வளத்தி காவல் நிலையத்தினருக்கு உத்தரவிட்டாா்.

