புதுடெல்லி: “இனி ஒரு நொடியும் தாமதியாமல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்,” என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கு செல்வப்பெருந்தகை கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
“தேர்தல் வரும்போதெல்லாம் எங்களுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகளிடம் கேட்கும் நிலையில் இருந்து, தொகுதிகளைப் பிரித்துக் கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் வளர்ச்சி காண வேண்டும்,” என்று கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
மற்ற கட்சிகளிடம் தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு வாங்கும் இந்த நிலை மாற வேண்டுமெனில் தமிழகத்தில் மீண்டும் காமராசர் ஆட்சி மலர வேண்டும். அதற்கு நம் தொண்டர்கள் அயராது பாடுபடவேண்டும் என்று செல்வப் பெருந்தகை தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை கட்டமைக்க வேண்டும் என்று திரு செல்வப்பெருந்தகை தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாகச் சென்று கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
புதன்கிழமையன்று திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய நகரங்களுக்குச் சென்று காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.