நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் கனமழை

நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் கனமழை

2 mins read
c06016a7-6deb-4d98-bff1-72c56eb892ca
திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய நகரங்களிலும் அவற்றின சுற்று வட்டாரங்களிலும் பெய்த கனமழையால் பல பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாயின.  - படம்: ஊடகம்

திருநெல்வேலி: தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தின் பல இடங்களில் கோடை வெயில் 41 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டி சுட்டெரித்தது. இப்போது பெய்து வரும் மழையால் அங்கு வெப்பம் தணிந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். அங்கு புதன்கிழமை காலை 8 மணியில் இருந்து 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 32 மி.மீட்டர் மழையும் மாவட்டம் முழுவதும் 91.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய நகரங்களிலும் அவற்றின் சுற்று வட்டாரங்களில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாயின. அதையடுத்து அப்பகுதிகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரை உடனுக்குடன் வடியவைப்பதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மக்கள் மாநகராட்சி நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளன.

தென்காசி மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரை 24 மணி நேரத்தில் ஆக அதிகபட்சமாக சங்கரன்கோவிலில் 40 மி.மீ., மழை பெய்துள்ளது. அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆக அதிகமாக திற்பரப்பில் 45 மி.மீ. மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்கள் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்றும் வரும் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் என்று சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதையடுத்து அந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

வைகை அணையில் தண்ணீர் திறப்பு

இதற்கிடையே ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாசன கண்மாய்களில் தண்ணீரைப் பெருக்கும் வகையில் வைகை அணையில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி 15 நாட்களுக்கு 3 கட்டங்களாக தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக கடந்த 10ஆம் தேதி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்