சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான நான்கு கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்துள்ளன. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. அதை பிரதமர் நரேந்திர மோடியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அதனால் அவர், தரம் தாழ்ந்த நச்சுக் கருத்துகளைப் பேசி வருகிறார். அவருடைய வெறுப்புப் பேச்சுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதன் அடிப்படையில் பாஜகவை மக்கள் நிராகரித்து வருகிறது என்று காங்கிரஸ் தமிழகத் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
காங்கிரசின் தேர்தல் அறிக்கை முஸ்லிம்களின் தேர்தல் அறிக்கையைப் போல் இருப்பதாக சாடியிருந்தார். பின்னர், முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும், தனியாரிடம் இருக்கும் செல்வங்களை கைப்பற்றி முஸ்லிம்களுக்கு மறுவிநியோகம் செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாகவும், அவதூறான கருத்துகளை கூறினார்.
பிரதமர் மோடியின் இதுபோன்ற வெறுப்புப் பேச்சுகள் நியாயமற்றவை என்ற அடிப்படையில் மக்களால் நிராகரிக்கப்பட்டு வருகிறது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரை இந்திய மக்கள் அனைவரும் சம உரிமையோடு, சம வாய்ப்போடு வாழ்வதற்கான உறுதிமொழிகளைத் தான் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கிற வகையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், பிரதமர் மோடி தனது அவதூறு பிரசாரத்தின் மூலம் மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதில் அவர் ஒருபோதும் வெற்றி காண்பது என்பது இயலாத ஒன்று என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

