தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல்துறையில் ராதிகா புகார்

1 mins read
b5067e3b-9932-48df-8f8c-cf441a5adbd0
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ராதிகா சரத்குமார். - படம்: இணையம்

சென்னை: அவதூறாகப் பேசிய விவகாரத்தில் திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராதிகா சரத்குமார் தரப்பில் அவரது மேலாளர் நடேசன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அந்தப் புகார் மனுவில், தனது குடும்பம் பற்றியும் தனது கணவர் பற்றியும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிகவும் இழிவாகப் பேசியதாகவும் எந்தவொரு காரணமும் இன்றி பொதுவெளியில் அவதூறு செய்திகளை மக்களிடையே பரப்பி அதன்மூலம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விளம்பரம் தேடுகிறார் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை கொடுங்கையூரில் கடந்த ஜூன் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவருடைய பேச்சு இணையத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதனையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் உத்தரவிட்டார். பின்னர், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததையடுத்து மீண்டும் அவர் திமுகவில் சேர்க்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்