சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மின் விபத்துகளால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாமக்கல், விழுப்புரம், சென்னை, சேலம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (மே 16) ஒரே நாளில் மின்சாரம் தாக்கி ஐவர் பலியாகியுள்ளனர்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை பகுதியில் கட்டடப் பணியின்போது ஆனந்த் என்ற இளைஞர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி ஆகியோர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் தேவனூரில் கட்டுமானப் பணிகளின்போது மின்சாரம் தாக்கி மேஸ்திரி ஜோதி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த அர்த்தநாரி என்பவரும் அவரது மகன் தண்டபாணியும் கடையின் பெயர் பலகையை மாற்ற முயன்றபோது, பெயர் பலகை மின்கம்பத்தில் மோதி மின் விபத்து ஏற்பட்டதில் தண்டபாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அர்த்தநாரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

