தீண்டாமைச் செயலை அனுமதிக்கவோ, வேடிக்கைப் பார்க்கவோ இயலாது: உயர் நீதிமன்றக் கிளை எச்சரிக்கை

தீண்டாமைச் செயலை அனுமதிக்கவோ, வேடிக்கைப் பார்க்கவோ இயலாது: உயர் நீதிமன்றக் கிளை எச்சரிக்கை

1 mins read
249a684f-1341-47b4-acb4-4837b87deefc
மதுரை உயர் நீதிமன்றக் கிளை. - படம்: ஊடகம்

சென்னை: தீண்டாமைக் கொடுமையை அறவே அனுமதிக்க இயலாது என மதுரை உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.

தீண்டாமைச் செயல்கள் நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளபொம்மன்பட்டியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தனது பகுதியில் உள்ள நான்கு கோவில்களில் சித்திரை, வைகாசி மாதங்களில் திருவிழா நடைபெறும் என்றும் அவ்விழாவில் பங்கேற்க ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அக்குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பது ஒருவித தீண்டாமை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்மனு மீதான விசாரணையின்போது தமிழக அரசின் வழக்கறிஞர் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள திருவிழாவில் ஆதிதிராவிட வகுப்பினரும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் சில பகுதிகளில் தீண்டாமை நிலவுவதும் பாகுபாடு பார்ப்பதும் ஏற்புடையதல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரசியல் அமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க நீதிமன்றம் உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்