சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டியும், பொதுநல வழக்கு தொடர்ந்தும் போராடி வந்த சமூக ஆர்வலர் பெர்ட்டின் ராயன் என்பவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்து 10 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்..
இதன்மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்குச் சீரழிந்து உள்ளது என்பது தெளிவாகிறது. திமுக ஆட்சியில் அரசுத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து யாருமே கேள்வி எழுப்பக் கூடாது என்கிற நிலையே இருந்து வருகிறது. திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களை அரசு விரைந்து கைது செய்ய வேண்டும் என்று சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக மே 16ஆம் தேதி கடல் சார் மக்கள் நல சங்கமம் அமைப்பின் சார்பில் திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் திரளாகக் கூடி மனு அளித்தனர். பெர்டின் ராயன் மீது சரமாரித் தாக்குதல் நடத்தியவரை காவல்துறை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். மேலும் ராயனின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
சமூக நீதிக்காக குரல் கொடுப்பவர்கள் இதுபோல தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்தால் சமூகத்தில் யாரும் பிரச்சினைகளுக்காகப் போராட வரமாட்டார்கள் என்ற எண்ணம் நிலவும். எனவே குடும்பத்தினருக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறை ஆணையரிடம் கோரிக்கை விடுத்தனர்.
சமூக ஆர்வலர் பெர்ட்டின் ராயன், கடந்த 4.5.2024ஆம் தேதி காலையில் பூப்பந்து விளையாட்டுப் பயிற்சிக்குச் சென்றபோது, சிலர் அவரை சரமாரியாக அரிவாளால் தாக்கினர். தலை, முதுகு, கைகள் உட்பட 6க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாள் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது கேரளாவின் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

