சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்தில் கஞ்சா, போதைப்பொருள் விற்பனை, கடத்தலைத் தடுக்க நேர்மையான காவல் அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட ரகசியக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக தமிழக எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பி இருந்தன. தமிழகம் போதைப்பொருள்களின் தலைநகரமாகிவிட்டதாகவும் அக்கட்சிகள் விமர்சித்தன.
இதையடுத்து, போதைப் பொருள்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை ஒடுக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில் போதைப் பொருள் விற்பனை, கடத்தலை ஒழிக்க சிறப்புப் பிரிவை உருவாக்க வேண்டும் என வலி யுறுத்தி உயர் நீதிமன்றக் கிளையில் திருமுருகன் காந்தி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தனர். எனினும் காவல்துறையினர் கூடுதல் விழிப்புடன் இருந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போதைப்பொருள் புழக்கம் அதிகரிக்காமல் தடுக்க இயலும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
“எனவே, தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கவும், போதைப்பொருள் குற்றவாளிகளுடன் கைகோத்து செயல்படும் சந்தேகத்துக்குரிய காவல் துறையினரை கண்காணிக்கவும் நேர்மையான காவல் அதிகாரிகள் உள்ளடங்கிய உயர்மட்ட ரகசியக் குழு அமைக்கப்பட வேண்டும்.
“இது தொடர்பாக, தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

