திருவாரூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 492 மதிப்பெண் பெற்றுச் சாதித்த மாணவியின் குடிசை வீட்டுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த துர்காதேவி என்ற அம்மாணவி, தனது குடிசை வீட்டில் மெழுகுவத்தி வெளிச்சத்தில் படித்து சாதித்துள்ளார்.
கொரோடாச்சேரி அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவி துர்காதேவி 10ஆம் வகுப்பில் கணித பாடத்தில் 98, அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
மேலும், தமிழில் 96, ஆங்கிலத்தில் 100, சமூக அறிவியல் பாடத்தில் 98 மதிப்பெண்களைப் பெற்று மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி துர்காதேவி தனது குடிசை வீட்டில் மின்வசதி இல்லாததால் மெழுகுவத்தி, மீன்னூட்டி விளக்கு வெளிச்சத்தில் படித்து வருவதாகவும் தனது வீட்டிற்கு இலவச மின் இணைப்பு அளித்தால் உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் மருத்துவர் ஆக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும் மாணவி துர்காதேவி கூறினார்.
இவரது வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டும் எனில் புதிதாக மூன்று மின் கம்பங்கள் நிறுவ வேண்டி இருக்கும் என்றும் அதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு ஏற்படும் என்றும் மின்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் துர்காதேவியின் நிலையை அறிந்த தமிழக அரசு அவர் வீட்டுக்கு இலவச மின் இணைப்பை வழங்கியுள்ளது. ஐந்து நாள்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட்டதற்காக தமிழக முதல்வருக்கும் அரசுக்கும் மாணவி துர்காதேவி நன்றி தெரிவித்துள்ளார்.