தமிழில் 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா

2 mins read
7dfd76cb-a9b9-45d9-bcd5-3798ec948c42
தமிழக அரசின் தலைமைச் செயலகம். - படம்: ஊடகம்

சென்னை: 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ள மாணவ, மாணவி யர்க்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுத் தேர்வுகளில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் சேர்த்து இந்தப் பாராட்டு விழா நடத்தப்பட இருப்பதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இம்முறை அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்த எட்டு மாணவ, மாணவியர் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர். இதேபோல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 35 பேர் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இவ்வாண்டு 1,364 அரசுப் பள்ளிகள் பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சியை எட்டியுள்ளன. 12ஆம் வகுப்பு தேர்வுகளில் 397 பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதித்துக் காட்டியுள்ளன. இப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் சென்னையில் நடைபெறும் பாராட்டு விழாவில் கௌரவிக்கப்படுகின்றனர்.

இது பள்ளிக்கல்வித் துறையின் வரலாற்றில் ஓர் மைல்கல்லாக கருதப்படுவதாக அத்துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ் ஆர்வலர்கள் பாராட்டும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் மாணவர்கள், இளையர்கள் மத்தியில் தமிழ்ப் பாடத்தை ஏற்றுப் படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர்.

“அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல! அவை பெருமையின் அடையாளம் என்பதைத் தொடர்ந்து பறைசாற்றும் விதமாக இந்தக் கல்வியாண்டின் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு அமைந்துள்ளன,” என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்