தென்காசி: கனமழை காரணமாக பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, சுதாரித்துக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
தென்காசி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதை அடுத்து, குற்றால அருவிகளில் குளிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு அனைத்து அருவிகளிலும் காவல்துறையினர், தீயணைப்பு படையினர் நிறுத்தப்பட்டனர்.
இதற்கிடையே, அருவியில் குளித்துக்கொண்டிருந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவரான அஷ்வின், 17, வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மெயினருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் பார்வையிட்டார். தீயணைப்பு வீரர்களும் காவலர்களும் ஆற்றுப்பகுதியில் மாயமான மாணவனைத் தேடிய நிலையில், பழைய குற்றாலம் கார் நிறுத்துமிடம் அருகே ஆற்றில் இருந்து அஷ்வின் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குளிக்க வந்த பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

