தேர்தல் ஆணைய செயல்பாடு மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது: மு.க.ஸ்டாலின்

தேர்தல் ஆணைய செயல்பாடு மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது: மு.க.ஸ்டாலின்

2 mins read
00b69edd-b2da-4213-bddf-5a8f24b1d4c6
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: வெற்றி முகட்டை நோக்கி ‘இண்டியா’ கூட்டணி பீடுநடை போடுவதாகவும் இதனால் தோல்வி பயத்தில் பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை, பொழுதொரு வெறுப்பு விதை எனப் பேசி வருவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் பொறுப்பற்ற பேச்சுகளைத் தடுக்க வேண்டிய இந்தியத் தேர்தல் ஆணையம் அந்தப் பணியைச் செய்யாமல் அமைதியாக இருப்பதை நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதவெறுப்புப் பிரசாரம் கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருப்பதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மக்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசுவதாகவும், பிரதமர் தன்னுடைய கற்பனைக் கதைகளையும் பொய் மூட்டைகளையும் கட்டவிழ்க்கத் தொடங்கியுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

“பயனற்றுப்போன வெறுப்புப் பரப்புரைகளால் விரக்தியடைந்துள்ள பிரதமர் மோடி, சொல்லிக்கொள்ள பத்தாண்டுகால சாதனைகள் என்று ஏதும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தத் துணிந்து, அவர் எப்போதும் ஏழை மக்களுக்கு எதிரானவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

“கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்துவரும் விடியல் பயணத் திட்டத்தைப் பகிரங்கமாக எதிர்க்கத் துணிந்திருக்கிறார். ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்திட்டு அறிமுகப்படுத்திய திட்டம் பயணச் சுதந்திரத்தைத் தந்ததோடு, பெண்களுக்குப் பலவகைகளிலும் ஏற்றத்தை அளித்திருக்கிறது. பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை எனப் புதுப்புரளி கிளப்பி இருக்கிறார்,” என்று முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும் என்றும், இண்டியா கூட்டணி வெற்றிபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்