மதுரை: ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழா ஒன்று மதுரை, திருமங்கலம் சொரிக்காம்பட்டி அருகேயுள்ள பெருமாள் கோவில்பட்டியின் காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோயிலில் நடந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (18.5.2024) நடந்த அந்த விழாவில் கிட்டத்தட்ட 10,000 பேருக்கு அசைவ உணவு சமைத்துப் பரிமாறப்பட்டது.
கோவிலில் நேர்த்திக் கடனாக விடப்பட்ட 125 ஆடுகள் அன்று பலியிடப்பட்டு சமைக்கப்பட்டது. அந்த விருந்துக்காக 2,500 கிலோ அரிசி கொண்டு சோறு சமைக்கப்பட்டது.
அந்த அசைவ விருந்து உணவு கடவுளுக்குப் படைத்த பின்பு அன்னதானமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பெருமாள் கோவில்பட்டியைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்டனர்.

