சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அம்மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு கடந்த 15ஆம் தேதியே அறிவுறுத்தப்பட்டது என்றும் எட்டு மாவட்டங்களில் உள்ள சுமார் இரண்டு கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவு தெரிவித்துள்ளது.
“தமிழ்நாட்டில் கடந்த ஒருமாத காலமாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் இயல்பைவிட அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் மே 21ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், சராசரி யாக 0.72 செ.மீ. மழை பதிவாகி உள்ளது,” எனப் பேரிடர் மேலாண்மைப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 5.35 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அங்கு ஏழு குடிசை வீடுகள் சேதமடைந்த நிலையில், 15 கால்நடைகள் இறந்து விட்டன.
குமரிக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை அடுத்துள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“மூன்று நாள்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என்பதால், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள சுமார் இரண்டு கோடி கைப்பேசி களுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன,” என தினகரன் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
குமரி, கோவை, நெல்லை, நீலகிரி மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினைச் சார்ந்த 296 வீரர்கள் அடங்கிய ஒன்பது குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே வங்கக்கடலில் 22ஆம் தேதி, அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

