திருவனந்தபுரம்: முதியோர்களைப் போலவே இந்திய இளையர்களையும் ஈர்க்கும் வகையில் கோவில் நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத் வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ உதியனூர் தேவி கோயிலில் நடைபெற்ற விழாவில் இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத்துக்கு விருது வழங்கப்பட்டது.
விருதைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவர் பேசியபோது, “கோயில்கள் என்பவை வயதானவர்கள் மட்டுமே இறைவன் நாமத்தை உச்சரிக்கும் இடமாக இருப்பதை மாற்றி, சமுதாயத்தை மாற்றும் இடமாகவும் இளைஞர்களை ஈர்க்கும் இடமாகவும் அமைய வேண்டும்,” என்று வலியுறுத்தி உள்ளார்.
“இளையர்கள் பயன்பெறும் வகையில் கோவில்களில் நூலகங்களை அமைக்கலாம். இதன்மூலம் இளைஞர்கள் கோவில்களுக்கு வந்து நூல்களை வாசிக்கவும் பல்வேறு விவாதங்களை நடத்தவும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும். கோவில் நிர்வாகங்கள் இந்த திசையில் செயல்பட்டால் பெரிய மாற்றங்கள் ஏற்படும்,” என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆலோசனைகளைப் பகிர்ந்துள்ளார்.

