சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலக வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகன இலக்கத்தகட்டில் காவலர் என ஒட்டப்பட்டிருந்த ஒட்டுவில்லையை போக்குவரத்து காவல்துறையினர் நீக்கினர். மேலும், அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் உள்ளிட்ட ஒட்டுவில்லைகளை ஒட்டக்கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்தது. மேலும், மே 1 ஆம் தேதி முதல் இதுபோன்ற ஒட்டுவில்லை ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவலர்கள் வாகனங்களில் உள்ள இலக்கத்தகடுகளில் ‘போலிஸ்’ (காவலர்) என ஒட்டப்பட்டிருந்த ஒட்டுவில்லையை நீக்கி, வேப்பேரி போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்தது. வாகனங்களில் உள்ள ஒட்டுவில்லையை அகற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.