நாகப்பட்டினம்: தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள், வேன், உயர்ரக கார்களில் வந்து ஆடுகளைத் திருடும் போக்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தெற்கு பொய்கை நல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் நள்ளிரவு நேரத்தில் காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று ஆடு ஒன்றை திருடி உள்ளது.
ஆடுகளின் உரிமையாளர் தூங்கச்சென்ற நேரத்தில் அந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது. ஆடு திருடப்படும் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்புக் கருவியில் பதிவாகி இருந்தது.
தற்போது இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பரவி வருகின்றன. மேலும் காவல்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கள் பகுதியில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவதால் காவல்துறையினர் இரவு நேர சுற்றுக்காவல் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

