கோவை: கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள், குடிநீர்க் குழாய் பதிக்கும் பணிகள், சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்த பிறகு சோதனை செய்வதற்காக சில இடங்களில் சரிவர அவை மூடப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து மூடாமல் விடப்பட்ட சாலையில் அரசுப் பேருந்தின் சக்கரம் சிக்கியது. கோவை மதுக்கரை மார்க்கெட் சாலையில் அரசுப் பேருந்து சக்கரங்கள் மண்ணில் சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாதாள சாக்கடை அமைப்பதற்கு சாலையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் முடிந்து பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துத்துறையினர் பாரந்தூக்கி உதவியுடன் பேருந்தை மீட்டனர். பின்னர் போக்குவரத்து சீரமைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.


