சென்னை: தமிழக மின்னிலக்க உச்சி மாநாடு 2024 சென்னையில் சிறப்பாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே 25, 26ஆம் தேதிகளில் இம்மாநாடு சென்னையில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை முன்னணி மின்னிலக்கச் சந்தைப்படுத்தல் அகாடமி செய்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சோஷியல் ஈகில் நிறுவனத்தின் இணை நிறுவனர் விஷ்ணு ஹரி, இம்மாநாட்டின் மூலம் மாறிவரும் மின்னிலக்கச் சந்தை, தொழில்துறை குறித்து ஏராளமான கருத்துகளை பரிமாறிக்கொள்ள இயலும் என்றார்.
“சம்பந்தப்பட்ட துறைகளைச் சார்ந்த ஏராளமான நிபுணர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். பிரகாசமான சிந்தனைகளையும் தலைவர்களையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வரும் வாய்ப்பை இம்மாநாடு வழங்கும்,” என்றார் விஷ்ணு ஹரி.
சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் நல்ல தொடர்புகளை உருவாக்குவதற்கும் இந்த உச்சி மாநாடு நல்லதொரு பாலமாக அமையும் என்றும் குறிப்பிட்ட அவர், மாநாட்டின்போது மின்னிலக்க ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என்றார்.

