சென்னை: போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜாஃபர் சாதிக், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது மனைவி ஹமீனாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்காக சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திங்கட்கிழமை அவர் முன்னிலையானார்.
அப்போது கணவர் ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதும் அவர் வெளிநாடுகளுக்கு போதைப்பொருள்களைக் கடத்தியதும் தெரியுமா என்று ஹமீனாவிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த விசாரணையும் ஹமீனா தெரிவித்த பதில்களும் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டது.
பல மணி நேரம் நீடித்த இந்த விசாரணைக்குப் பிறகு அங்கிருந்து கிளம்பிச்சென்றார் ஹமீனா. அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் அவர் பல்வேறு முக்கியமான தகவல்களைத் தெரிவித்துள்ளார் என்றும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜாஃபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு கடந்த மார்ச் மாதம் கைது செய்துள்ளது. அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை வெளிநாடுகளுக்கு கடத்தினார் எனும் குற்றச்சாட்டை ஜாஃபர் சாதிக் எதிர்கொண்டுள்ளார்.

